மெல்பேர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள கிறிஸ்டீன் ஸ்ட்ராச்சன் கலையரங்கில், நாம் நமது “தமிழ் இலக்கிய விழாவை” வெகு சிறப்பாகக் கொண்டாடினோம்.

அக்டோபர் மாதம் 6 ம் தேதி நடைபெற்ற இவ்விழா மாலை 5 மணிக்கு துவங்கி நள்ளிரவு 11.40 மணி வரை நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் வந்திருந்து விழாவை கண்டு களித்தார்கள்.

 
 
செல்வன் கேசவா தமிழ்த்தாய் வாழ்த்து பாட விழா இனிதே ஆரம்பித்தது. நிறுவனத்தின் தலைவர் திரு சுகுமாரன் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார். கவியரங்கம், பட்டிமன்றம், நாடகம் மற்றும் பரிசுவழங்கல் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் செல்வி சரண்யாவும், Dr. புவனாவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
 
விழாவின் துவக்கத்தில் அரை மணி நேரம் தமிழின் சிறப்பு பற்றிய காணொளிக்காட்சி காண்பிக்கப்பட்டது. உலகில் தோன்றிய பல மொழிகளுக்கு அடிப்படையான மூல மொழியாக தமிழ் மொழி தான் இருந்திருக்கக்கூடும் என்ற கருத்துக்கு சான்றாக பல சொற்களை மேற்கோள் காட்டி காட்சி விளக்கங்கள் இருந்தன. “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” என்ற சொற்றொடருக்கு சான்று பகர்வதாக இருந்தது காணொளிக் காட்சி.
 
 
கவியரங்கம் : “இதயம் மலர்வது எப்போது”
 
திரு சங்கர சுப்பிரமணியன் அவர்கள் கவியரங்கத் தலைமையேற்று  கவிஞர்களை அறிமுகப்படுத்திவைக்க கவியரங்கம் ஆரம்பமானது. இதயம் மலர்வது எப்போது என்ற தலைப்பில் திரு பொன்னரசு அவர்களும், திரு அறவேந்தன் அவர்களும், Dr கார்த்தி வேல்சாமி அவர்களும் கவிதை வாசித்தார்கள்.
 
 
பட்டிமன்றம் : “திரைப்படப் பாடல்களில் இலக்கியத்தரம்”
 
கவிஞர் கண்ணதாசன் அவர்களும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் இயற்றிய திரைப்படப்பாடல்களில் உள்ள இலக்கியத்தரத்தை, விமரிசித்து பட்டிமன்றம் நடந்தது. திரு சுகுமாரன் அவர்கள் நடுவராக இருக்க, கண்ணதாசன் அணிக்கு அணித்தலைவராக Dr கார்த்தி அவர்களும், திரு முத்து அவர்களும் பேசினார்கள். வைரமுத்து அணிக்கு சார்பாக திரு முருகன் அவர்கள் அணித்தலைவராகவும், திரு திம்மி ரெட்டி அவர்களும் பேசினார்கள்.
 
 
நாடகம் : “எக்கரை பச்சை ?”
 
வெளிநாட்டில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் தான் நாடகத்தின் மையக்கரு. இன்பம் எங்கே இருக்கிறது என்பதையும் தாய்நாட்டு உணர்வையும், நண்பர்கள் உறவினர்களிடம் நேசம் காட்டுதலின் அவசியத்தையும் குறிப்பாக குழந்தைகளின் தமிழ்க்கல்வி அவசியத்தை வலியுறுத்தியும் நாடகம் வடிவமைக்கப் பட்டிருந்தது.
 
 
விழாவின் இறுதியில் விழாவைக்கண்டு களித்த மக்களுடன் கலந்துரையாடல் நடந்தது.  
 
ஏறத்தாழ 7 மணி நேரம் நடந்த இந்த தமிழ் இலக்கிய விழா மெல்பேர்ன் வாழ் மக்களின் தமிழ் ஆர்வத்தையும் மொழிக்காக அவர்களின் அற்பணிப்பையும் பறைசாற்றுவதாக இருந்தது.
 
திரு சுகுமாரன் அவர்கள் நன்றியுரைகூற பரிசுகள் வழங்க, அறுசுவை விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
 
Photo Gallery